பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை 40 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
10/8/2025 2:24:33 PM
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை நேற்று கிருஷ்ணகிரி அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ்கொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.ஆனால் முதலில் அவரது புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர்.
பின்னர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையீட்டால், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சிறுமியின் தந்தை, இந்த வழக்கில் தேன்கனிக்கோட்டை போலீசார் முறையாக விசாரிக்காததால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று சிபிசிஐடி டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ. கலைவாணி ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுகோட்டைக்கு சென்று அங்கு விசாரணை செய்துள்ளனர்.பின்னர் சம்பவம் நடத்த இடத்திற்கு அந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இன்று இரண்டாம் நாளாக இந்த சம்பவம் குறித்து 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.