கொருக்குப்பேட்டையில் பயங்கரம் : சங்கிலியால் இளம்பெண் கை, கால்களை கட்டி சித்ரவதை நகைகளை பறித்து பிளாட்பாரத்தில் வீசிய கொடூரம்
10/8/2025 2:14:43 PM
தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் இளம்பெண்ணின் கை, கால்களை சங்கிலியால் கட்டி வாயில் துணியை திணித்து கும்பல் ஒன்று சித்ரவதையில் ஈடுபட்டது. 2 நாள்களுக்கு பின் நகைகளை பறித்து பிளாட்பாரத்தில் பெண்ணை விட்டு சென்ற கொடூர சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரை சேர்ந்தவர் வேலன் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி (30). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தேவி, ராமநாதபுரம் மாவட்ட வல்லநாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி வேலனின் உறவினர் ஒருவர் சென்னையில் இறந்து விட்டார். அதனால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வல்லநாடுக்கு சென்று தனது மனைவியை அழைத்து வந்தார் வேலன். பின்னர் இருவரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இதையடுத்து, 29ம் தேதி, ‘என்னை என் வீட்டில் விட்டு விடுங்கள்’ என வேலனிடம் தேவி கூறியுள்ளார். இதையடுத்து அன்று மாலை 5 மணியளவில் எழும்பூருக்கு செல்வதற்காக தண்டையார்பேட்டை ரயில் நிலையத்துக்கு மனைவியை அழைத்து சென்றார் வேலன். அப்போது மின்சார ரயில் சென்று விட்டது. உடனே மனைவியிடம், ‘ரயில் சென்று விட்டதால் தண்டவாளம் வழியாக நடந்து கொருக்குப்பேட்டைக்கு போகலாம்.
அங்கிருந்து ஆட்டோவில் எழும்பூருக்கு சென்று விடலாம்’ என்று வேலன் கூற, தேவியும் சம்மதித்தார். இதையடுத்து இருவரும் தண்டவாளம் வழியாக நடந்தனர். கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து எண்ணூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். அப்போது, ‘நான் என் ஊருக்கு செல்ல மாட்டேன்’ என்று தேவி கூறியுள்ளார். வாக்குவாதம் அதிகரித்தது. கோபத்தில் தேவியை அங்கேயே விட்டு விட்டு வேலன் மட்டும் வீட்டுக்கு நடந்து வந்து விட்டார். ஆனால் இரவுவரை தேவி, வீட்டுக்கு வரவில்லை. ‘வல்லநாட்டுக்கு சென்றிருப்பார்’ என நினைத்து வேலன் இருந்து விட்டார். உறவினர்கள் கேட்டபோது, வல்லநாட்டுக்கு சென்று விட்டதாக வேலன் கூறியுள்ளார்.வெகு நேரமாக தேவி வராததால் உறவினர்கள் உதவியுடன் வேலன் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 30ம் தேதி காலை வல்லநாட்டில் உள்ள உறவினருக்கு போன் செய்தபோது, ‘தேவி அங்கும் செல்லவில்லை’ என்பது தெரிந்தது.
இதையடுத்து தேவியின் அத்தை ராணி, ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து தேவியை புகைப்படத்தை காட்டி தேடினர். அப்போது, தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே தேவியை பார்த்ததாக சிலர் கூறினர். இதையடுத்து தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் 2ம் தேதி அதிகாலை ராமநாதபுரத்தில் இருந்து தேவியின் அம்மா குரும்பாவி, ராணிக்கு போன் செய்து, ‘தேவி வல்லநாட்டுக்கு வந்து விட்டார். ஆனால் அவரது உடல் முழுவதும் பலத்த காயம் உள்ளது. மாட்டு கொட்டகையில் அடைத்து வைத்து சிலர் சித்ரவதை செய்து நகைகள் பறித்துள்ளனர்’ என்று மிகுந்த மன உளைச்சலில் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ராணி, ‘உடனே தேவை அழைத்து கொண்டு சென்னைக்கு வாருங்கள்’ என கூறியுள்ளார். இதையடுத்து அவரது அண்ணன் செல்வகுமார், தேவியை அழைத்து கொண்டு அன்று மாலையிலேயே சென்னைக்கு வந்தார். பின்னர் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் செல்லப்பா முன்பு தேவியை ஆஜர்படுத்தினர்.
விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்:சம்பவத்தன்று தேவியை அவரது கணவர் அடித்து விட்டு கோபத்தில் தனியாக விட்டு சென்றுள்ளார். அதற்கு பிறகு சென்னையில் வழி தெரியாததால் வேலன் அழைத்து வந்த தண்டவாளம் வழியாக தேவி நடந்து சென்றுள்ளார். அப்போது, தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இருட்டாக இருந்ததால், தேவி பயத்தில் நடுங்கியுள்ளார். அந்த நேரத்தில் வழியில், பெரிய குங்கும பொட்டு வைத்திருந்த ஆண் உள்ளிட்ட 2 பேர், தேவி அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளனர். அவர், கொடுக்க மறுத்ததால் சரமாரியாக அடித்து நகைகளை கேட்டுள்ளனர். அப்போதும், கொடுக்காததால் பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் துரத்தி பிடித்து தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே மாடுகள் கட்டும் கொட்டகையில் அடைத்து வைத்து, கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர்.
2 நாட்களாக சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர். பலமுறை மயக்க நிலையில் இருந்த அவரை, இரவு, பகல் பாராமல் அடித்து துன்புறுத்தினர். மேலும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் ஒருநாள், மயங்கிய நிலையிலேயே அவரது கண்களை கட்டி அழைத்து சென்றனர். விழித்து பார்த்தபோது ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் படுத்து கிடப்பது தெரிந்தது. அதன்பின் அங்குள்ள ஒருவரிடம் ஊர், பெயரை சொல்லி விடும்படி கெஞ்சியுள்ளார். அவர்கள்தான் ஊரில் கொண்டு விட்டுள்ளனர்.இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்லப்பா, தேவியை அழைத்து கொண்டு குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்றார். அங்குள்ள மாட்டு கொட்டகையில் யாரும் இல்லை. இதையடுத்து தேவியை அவரது அத்தை ராணி, தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள துர்கா தேவி நகரில் தங்க வைத்தார். 3ம் தேதி மருத்துவமனைக்கு தேவி சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு சிலர், ‘ஒழுங்காக ஊருக்கு சென்று விடு’ என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன தேவி, இந்த தகவலை அத்தை ராணியிடம் கூறி, ‘என்னை வல்லநாட்டில் கொண்டு சென்று விடுங்கள்’ என கதறினார். இதையடுத்து தேவியை ஊருக்கு அவர் அனுப்பினார்.புகார் கொடுத்து ஒரு வாரம் ஆன நிலையிலும் போலீசார், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதியினர் கூறினர்.