கோவையில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் வழி நெடுகிலும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
10/8/2025 2:14:11 PM
மேட்டுப்பாளையம்: திமுக பொருளாளர் மு.கஸ்டாலின் இன்று காலை கோவை மேட்டுப்பாளையத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை துவக்கினார். சாலை நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி வருகிறார். முதல்கட்ட பயணத்தை கன்னியாகுமரியில் துவங்கி, திருச்சியில் நிறைவு செய்த ஸ்டாலின், 2ம் கட்ட பயணத்தை நேற்று நீலகிரியில் துவக்கினார். முதுமலை, கூடலூர், ஊட்டியில் தேயிலை விவசாயிகள், பழங்குடியினர், தொழில்முனைவோரை சந்தித்து குறைகேட்டார். இரவு குன்னூரில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார். முதல்நாள் பயணத்தை நிறைவு செய்த ஸ்டாலின், மேட்டுப்பாளையம் விடுதியில் தங்கினார்.இன்று காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார். கோவை மெயின் ரோட்டில் மக்கள் புடைசூழ நடந்து சென்றார். சாலையின்இருபுறமும் திரண்டிருந்த ஆண்கள், பெண்கள், வியாபாரிகள் ஸ்டாலினை ஆர்வமுடன் கைகுலுக்கி வரவேற்றனர். மேட்டுப்பாளையம் நகர எல்லை வரை நடந்து வந்த ஸ்டாலின், பின்னர் வேனில் காரமடை, வீரபாண்டி பிரிவு சென்றார்.
அங்கு ஆயர் அம்புரோஸ் சமூக நல கூடத்தில் பாக்கு வியாபாரிகள், கைத்தறி நெசவாளர்கள், கட்டட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் அதிமுக ஆட்சியின் அவலம் குறித்து ஸ்டாலினிடம் வேதனையுடன் முறையிட்டனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து வையம்பாளையம் சென்ற ஸ்டாலின், விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் கலந்துரையாடினார். மதியம் 12 மணிக்கு கண்ணம்பாளையத்தில் விசைத்தறியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் மாலை 4 மணிக்கு ஓடையங்குளம் தென்னை விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். 6 மணிக்கு பொள்ளாச்சி செல்லும் ஸ்டாலின், வர்த்தக பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சக்தி ஓட்டலில் முக்கிய பிரமுகர்களுடன் சந்திக்கிறார். 8 மணிக்கு பொள்ளாச்சி நகரில் வேனில் பிரசாரம் செய்கிறார்.
இரவு கோவையில் தங்கும் ஸ்டாலின், நாளை (9ம்தேதி) கோவை மாநகரில் மக்களை சந்திக்கிறார்.குன்னூர் ராணுவ மையம் அருகேயுள்ள பாய்ஸ் கம்பெனி என்ற இடத்தில் உள்ள பாரீஸ் ஹாலில் மகளிர் குழுவுடன் நேற்று மாலை கலந்துரையாடல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மக்களை பற்றி துளிகூட சிந்திக்காத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மகளிர் குழுவை கொண்டுவந்தது திமுக ஆட்சி. கடந்த 1989ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தர்மபுரியில் மகளிர் குழுவை முதல்முறையாக ஆரம்பித்தார். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், தன்மானத்துடன் வாழ வேண்டும், சுயமாக தொழில் செய்து அவர்கள் வாழ்வை அவர்களே அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மகளிர் குழுவை உருவாக்கினார். பெண்கள் சிறு, சிறு சுயதொழில் துவங்க ஏதுவாக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மகளிர் குழுவுக்கு வங்கி கடன் மறுக்கப்படுகிறது. வங்கிகளில் மகளிர் குழுவுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால், திமுக ஆட்சியில் மகளிர் குழுவினர் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.
தற்போது, தேர்தல் நெருங்குகிறது என்பதால் மகளிர் குழுவை ஏமாற்ற செல்போன் தருகிறோம் என்கிறார்கள். சிம் கார்டு யார் கொடுப்பது, மாதாந்திர கட்டணம் யார் கொடுப்பது, சார்ஜர் யார் கொடுப்பது என்று கேட்டால், இது எங்களுக்கு தெரியாதா என அமைச்சர் பதில் சொல்கிறார். சார்ஜர் கொடுத்தாலும், சார்ஜ் போடுவதற்கு கரன்ட் இல்லை. புகார் தெரிவிக்க, ஜெயலலிதா மொபைல் எண்ணை தரத்தயாரா என கேட்டால், அதற்கு அந்த அமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. மகளிர் குழுவுக்கு செல்போன் என்பது தேர்தல் நாடகம். ஏமாந்து விடாதீர்கள்.கருணாநிதி ஆட்சி அமைந்தவுடன், முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடுவதுதான். இது உறுதி. தற்போது, ரேஷன்கடையில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்வது இல்லை. ஆனால், திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் 1ம்தேதி முதல் 31ம்தேதி வரை ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டது.
முதியோர் உதவித்தொகை 60 சதவீதம் பேருக்கு நிறுத்திவிட்டார்கள். எனது தொகுதியிலும் முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டனர். நான், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சாதகமாக தீர்ப்பு வந்தால், தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை எல்லோருக்கும் கிடைக்கும். ஏழை பெண்களின் திருமணம் தடை படக்கூடாது என்பதால் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் திருமண நிதிஉதவி திட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி. பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்கள் மேம்பாட்டுக்காக கருணாநிதி இன்றுவரை தொடர்ந்து போராடுகிறார். பெண்கள் நலன் காக்க தமிழகத்தில் நல்லாட்சி அமையவேண்டும். இன்னும் 8 மாத காலம்தான் உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். கருணாநிதி தலைமையில் நல்லாட்சியை உருவாக்கித்தாருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.