தமிழகத்தில் மழை நீடிக்கும்
10/8/2025 2:05:06 PM
சென்னை: தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தமிழக கடலோரத்தில் நிலை கொண்டுள்ளதால் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஆலங்குடி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்தது. மயிலாடுதுறை, அறந்தாங்கி, சாத்தூர், பெரம்பலூரில் தலா 6 செ.மீ, திருவாரூர், திருவிடை மருதூர், திருச்சி, திருவையாறில் தலா 4 செ.மீ, புதுக்கோட்டை, நத்தம், பழனி, சோளிங்கர், பரமக்குடி, கோத்தகிரியில் தலா 3 செ.மீ., அரியலூர், காஞ்சிபுரம், காரைக்கால், மேலூர், ராசிபுரம், பவானி, நன்னிலம், பெருந்துறை, விருதுநகரில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ள வட கிழக்கு பருவ மழைக்கான சாதகமான சூழல்களும் உருவாகியுள்ளது. இதை உணர்த்தும் வகையில் கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதியை நோக்கி குளிர்ந்த கடல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உட்பட தமிழக முழுவதும் வெப்ப சலனம் தொடர்கிறது. இதனால் மழை நீடிக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இரவு நேரத்தில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.