தமாகா, கொமதேக நிர்வாகியின் ஐடி திடீர் சோதனை
10/7/2025 2:52:42 PM
ஆத்தூர்: தமாகா முன்னாள் எம்எல்ஏ, கொமதேக நிர்வாகி வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் தமாகா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம். துலக்கானூர் தெற்குகாடு பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான சேகோ ஆலை, வீடு மற்றும் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 3 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இதுபோல் துலக்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொமதேக மாவட்ட அமைப்பாளர் பிரபாகரனுக்கு சொந்தமான சேகோ ஆலை மற்றும் அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, அம்மம்பாளையம் பகுதியில் உள்ள சம்பத் என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலை, ராணிப்பேட்டை மற்றும் கடை வீதி பகுதியில் உள்ள ஆத்தூர் நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவிசங்கர் என்பவரின் நகை கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆத்தூர் கடைவீதியில் உள்ள ரத்னா ஜூவல்லரியிலும் சோதனை நடந்தது.
30 பேர் கொண்ட குழுவாக 7 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்தூர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.