மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உயர்வு : ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
10/7/2025 2:47:52 PM
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,899 கனஅடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க இன்று 2வது நாளாக தடை நீடிக்கிறது.கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் அம்மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மாண்டியா, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், மேகதாது, அஜ்ஜிப்பாறை, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 7299 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 18,899 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 10,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகளவில் உள்ளதால், அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
நேற்று காலை 68.72 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 69.57 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், நீர்மட்டம் ஒரே நாளில் அரை அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 32.33 டிஎம்சி. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பது டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒகேனக்கல்லில்வெள்ளப்பெருக்குஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மதியம் வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோரங்களில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது. தீயணைப்பு துறையினர், போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.