திருப்பதி கோயிலில் மாற்றுதிறனாளிகளுக்கு தனி லட்டு கவுன்டர்
10/3/2025 12:09:14 PM
திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கும் டயல் யுவர் இஒ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை செயல் அலுவலர் சாம்பசிவ ராவ் கலந்து கொண்டு பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் பக்தர்களிடம் அநாகரீகமாக பேசி மனம் புண்படும்படி நடந்துகொள்வதாக கூறப்பட்ட புகாருக்கு, கோயில் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சேவகர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.இதையடுத்து மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு லட்டு பெற தனி கவுன்டர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இதுகுறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.
ரூ. 50க்கான தரிசன டிக்கெட்டுகள் குறைவாக விற்கப்படுவதாக வந்த புகாருக்கு, நாள்தோறும் 1,500 டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இலவச தரிசனம் மற்றும் திவ்ய தரிசனத்தில் காத்திருக்கும் நேரத்தை குறைத்து விரைவாக சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசியதாவது:அக்டோபர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கருட சேவை நடைபெறும் அக்டோபர் 18ம் தேதி மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.