உலகின் பார்வை எங்கள் மீது 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது அமெரிக்காவில் மோடி பெருமித பேச்சு
9/28/2015 2:30:19 PM
சான் ஜோஸ்: 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி சிலிக்கான் வேலியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் சிலிகான் வேலியில் வசித்து வரும் சுமார் 18500 இந்தியர்கள் திரண்ட பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். இதற்கான ஏற்பாடுகள் சான் ஜோஸ் என்ற இடத்தில் எஸ்ஏபி மையத்தில் செய்யப்பட்டிருந்தது. இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில், 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு வலிமையும் உறுதியும் மிக்கதாக மாறும். எனது ஒவ்வொரு நிமிடத்தையும் நாட்டிற்கு சேவை செய்வதற்காகவே செலவழித்து வருகிறேன்.
கடந்த 16 மாதத்தில் சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியா குறித்த பார்வையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் கவனமும் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இந்தியாவின் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் இளைஞர்கள். இந்தியாவில் உள்ள 65 சதவீத மக்கள் 35 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 80 கோடி. ஒவ்வொரு இந்தியனும் தனது திறமையை காண்பிப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் ஆகும். இன்று இங்கு செப்டம்பர் 27ம் தேதி. இந்தியாவில் செப்டம்பர் 28. மாவீரன் பகத்சிங் பிறந்த தினம். அவருக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். அப்போது கூட்டத்தினரும் மோடியுடன் சேர்ந்து வீரன் பகத்சிங் வாழ்க வாழ்க என்று கோஷமிட்டனர்.
தொடர்ந்து மோடி பேசுகையில், கடந்த ஆண்டு நியூயார்க்கில் மேடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பேசிய பிறகு தற்போது மீண்டும் உங்களை சந்திக்கிறேன். 25 ஆண்டுகளுக்கு பிறகு நான் கலிபோர்னியா வந்துள்ளேன். மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் நன்றாக காண முடிகிறது. அதில் இந்தியாவின் தாக்கமும் இருப்பதையும் என்னால் உணர முடிகிறது. இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறுவதற்கு இங்கு வாழும் இந்தியர்களும் ஒரு காரணம். இந்தியர்கள் கம்ப்யூட்டர் துறையில் சாதித்துள்ளதால்தான் உலகத்தின் கவனம் நம்மை நோக்கி திரும்பியுள்ளது. அவ்வாறு இந்தியா மீதான உலகத்தின் பார்வை மாறாமல் இருக்குமானால், 21ம் நூற்றாண்டை அவர்கள்தான் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவர். ஏனெனில் அப்போது 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். இந்தியாவில் 100 நாட்களில் 18 கோடி பேருக்கு வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம் வங்கிகளில் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் முழுமையான கணிணி மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஊழல், முறைகேடுகள் குறைக்கப்பட்டு வருவதுடன், அரசின் பல ஆயிரம் கோடி செலவுகளும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியா ஒரு போதும் பின்னடைவை சந்திக்காது. தற்போது இந்தியா ஒரு வலிமையான நாடாக மாறியுள்ளது. அதுவும் வெறும் 15 மாதத்தில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வருவதாக சர்வே கூறுகிறது. தீவிரவாதமும், புவி வெப்ப மயமாதலும் மிகப் பெரிய சவாலாக இன்றைக்கு நம்முன் உள்ளன.
இவற்றை குறைக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று எதுவும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டால் மட்டுமே அதை வெற்றி கொண்டு உலகத்தில் அமைதியை கொண்டு வர முடியும். இந்தியா எப்போதும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் நாடாகும். காந்தி, புத்தன் போன்றோர் தோன்றி அகிம்சையை போதித்த நாடாகும். ஐநாவில் இன்று தீவிரவாதத்திற்கு எதிரான விவாதங்களை எழுப்புவேன். அதிபர் ஒபாமா தலைமையில் கூட்டப்படும் சமாதான மாநாட்டில் இந்த விவகாரங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களான நான்சி பெலோசி, எட் ராய்ஸ், அமி பெரா, ஜார்ஜ் ஹோல்டிங் உள்ளிட்டோர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா தலைமையில் நடைபெறும் ஐநா சமாதான கூட்டத்தில் மோடி இன்று பங்கேற்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி அவற்றை முடித்துக் கொண்டு நாளை நாடு திரும்புகிறார்.