கம்ப்யூட்டர்கள் வழங்குவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி : திருவள்ளூரில் பதுங்கியவர் கைது
9/28/2015 2:24:04 PM
திருவள்ளூர்: பீகாரில் உள்ள பள்ளிக்கு கம்ப்யூட்டர் அனுப்புவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த, சென்னையில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளரை, திருவள்ளூர் அருகே போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளம் பீகார் அடுத்த ஹவுரா பகுதியில் உள்ளது டான்போஸ்கோ தொழில்நுட்ப பள்ளி. இப்பள்ளியின் முதல்வராக டோமி ஜோசப் என்பவர் உள்ளார். இப்பள்ளிக்கு கம்ப்யூட்டர்கள் தேவைப்பட்டது. இந்த கம்ப்யூட்டர்களை அனுப்புவதாக சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள எஸ்எம்எக்ஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சிவமணி(52) என்பவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இதற்கான தொகை ரூ.22 லட்சத்தை மேற்படி நிறுவனத்துக்கு கடந்தாண்டு மே 11ம் தேதி காசோலையாக பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது. காசோலை பெற்றுக்கொண்டு, அதை வங்கியில் செலுத்தி பணத்தை உரிமையாளர் சிவமணி பெற்றுக்கொண்டார்.
ஆனால், ஒப்பந்தப்படி கம்ப்யூட்டர்களை ஹவுராவில் உள்ள பள்ளிக்கு முறைப்படி அனுப்பாமல், மோசடி செய்தார். இது குறித்து, மேற்கு வங்காள குற்றப்பிரிவு போலீசில் பள்ளி முதல்வர் டோமிஜோசப் புகார் கொடுத்தார். இது குறித்து குற்றப்பிரிவு எஸ்.ஐ.,பட்டாச்சார்யா வழக்குபதிந்து, மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை தாம்பரத்தில் உள்ள எஸ்எம்எக்ஸ் நிறுவனம் வந்து விசாரணை செய்ததில், அதன் உரிமையாளர் சிவமணி தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து சிவமணி இருக்கும் இடத்தை செல்போன் தவறை வைத்து கண்டறிந்த மேற்கு வங்காள போலீசார், திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் பதுங்கியிருந்த சிவமணியை நேற்று இரவு, திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உதவியுடன் கைது செய்தனர். தொடர்ந்து சிவமணியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக மேற்கு வங்காளத்துக்கு அழைத்துச் சென்றனர்.