தஞ்சை அருகே துப்பாக்கியுடன் சிக்கிய ரவுடிகள்
9/28/2015 2:23:35 PM
தஞ்சை: துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடிபட்ட 2 திருச்சி ரவுடிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தஞ்சை அருகே தென்பெரம்பூர் ஆற்றங்கரையில் பட்டாக்கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் காரில் நின்ற திருச்சியை சேர்ந்த ரவுடி 2 பேரை தஞ்சை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் அருகே உள்ள தென்பெரம்பூர் ஆற்றங்கரையில் சந்தேகத்தின் பேரில் ஒரு கார் நிற்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் அங்கு சென்று, காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டபோது காரின் பின்பகுதியில் ஒரு துப்பாக்கி(ரிவால்வர்), அதில் 4 தோட்டாக்கள் மற்றும் பட்டா கத்தி, அரிவாள் ஆகியவை இருந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்த ஜெய் என்ற ஜெயக்குமார்(33), இவரது நண்பர் திருச்சி மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த முருகையன் மகன் ரஜினி என்ற கருப்பையா(31) என்பதும், இவர்கள் மீது திருச்சியில் 6 கொலை வழக்கு உட்பட 9 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ஆயுதங்கள், காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். தஞ்சைக்கு காரில் ஆயுதங்களுடன் எதற்காக வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதில் இவர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.