கோடிக்கணக்கில் மோசடி அறக்கட்டளை நிர்வாகிக்கு குண்டாஸ்
9/28/2015 2:18:47 PM
புதுக்கோட்டை: கோடிக்கணக்கில் மோசடி செய்த அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா குடுமியான்மலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(42). இவர் சவரிமுத்து அருள்தாஸ் என்ற பயரில் நினைவு அறக்கட்டளையை நடத்தி வந்தார். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக கூறி ரூ.3 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக ரவிச்சந்திரன் மீது ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மோகன்ராஜ்(52) ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கடந்த ஜூலை 28ம் தேதி கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர். நகை மற்றும் மோசடியாக தயார் செய்த ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. இவரது கூட்டாளிகள் அகஸ்டின் பியோ, சுந்தர், தேவராஜன், அன்சர்கான் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி, கவுந்தப்பாடியில் யமுனாராணியிடம் ரூ.90 ஆயிரம், சேலம் மாவட்டம் தனியார் நிறுவன விற்பனை மேலாளராக இருந்து வந்த கண்ணன் மற்றும் உமர்பாரூக் ஆகியவர்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 62 லட்சமும், நாகப்பட்டினத்தில் தமிழ்செல்வன் என்பவரிடம் ரூ.1 கோடியே 25 லட்சமும் மோசடி செய்துள்ளார்.எனவே ரவிச்சந்திரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய ஈரோடு மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி பரிந்துரையின்பேரில் கலெக்டர் பிரபாகரன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.