திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் தீர்க்கப்படும் : திண்டுக்கல்லில் மு.க.ஸ்டாலின் உறுதி
9/28/2015 2:14:15 PM
திண்டுக்கல்: திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ மேற்கொண்டுள்ளார். இன்று அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் ஸ்டாலின், ‘திமுக ஆட்சி விரைவில் மலரும், அப்போது உங்களது குறைகள் தீர்த்து வைக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறார். நாகர்கோவில் மாவட்டத்தில் பயணத்தை தொடங்கிய ஸ்டாலின் நேற்று தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள சின்னுபட்டியில் கட்சி பிரமுகர் இல்லத்தில் தங்கினார்.
இன்று காலை 8.45 மணியளவில் வத்தலக்குண்டுவில் தனது பயணத்தைதொடங்கினார். வத்தலக்குண்டு எண்ணெய் கடை முக்கு வந்த ஸ்டாலின் அருகேயுள்ள மார்க்கெட் வீதிக்கு சென்றார். அப்போது மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பெண்களிடம் கலந்துரையாடினார். காய்கறிகளின் விலை விபரம் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த வியாபாரிகளிடமும் உரையாடினார். மார்க்கெட்டில் நிலவும் சுகாதாரம், கடைகளுக்கான வாடகை விபரம், உள்ளாட்சி சார்பில் செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து கேட்டார்.
பின்னர் நடைபயணம் துவங்கிய ஸ்டாலின் திரண்டிருந்த மக்களை சந்தித்துப் பேசியபடி மதுரை சாலையில் வந்தார். அவர்களில் பலர் அதிமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்கள் குறித்து எடுத்துக்கூறினர்.’ திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த அவலங்கள் அனைத்தும் களையப்படும்,’ என உறுதி அளித்தார். அங்கிருந்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடந்தபடியே பொதுமக்களை சந்தித்து வந்தார். இளைஞர்கள் பலரும் ஸ்டாலினுக்கு உற்சாகமாக வந்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அங்கிருந்து நிலக்கோட்டை வந்த ஸ்டாலின் காய்கறி, பூ மார்க்கெட்டில் வியாபாரிகள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டார். வியாபாரிகள் பலர் தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். பின்னர் சிலுக்குவார்பட்டி சென்ற ஸ்டாலின், அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றார். கிறிஸ்தவ மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர்கள் சிறுபான்மையினருக்கு திமுக ஆட்சிக்காலத்தில் செய்த திட்டங்கள் குறித்து நினைவு கூர்ந்ததுடன், தங்களின் ஆதரவு என்றும் திமுகவுக்கே என உறுதி அளித்தனர்.
அங்கிருந்து சின்னாளபட்டி சென்ற ஸ்டாலின், கைத்தறி நெசவாளர்களை சந்தித்து பேசினார். சின்னாளபட்டி கண்டாங்கி சேலை தயாரிப்புக்கு பெயர் பெற்றது. தற்போது அந்த தொழில் நலிவடைந்து விட்டது குறித்து நெசவாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
பின்னர் தர்மத்துப்பட்டியில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது திமுக ஆட்சிக்காலத்தில் செய்த திட்டப்பணிகளையும், தற்போது நிலவும் அதிமுக ஆட்சியின் அவலநிலையையும் எடுத்துக் கூறினார். பின்னர் கன்னிவாடி சென்ற ஸ்டாலின், அங்கு கரும்பு விவசாயிகளை சந்தித்து, அவர்களின் பிரச்னைகள் மற்றும் தேைவப்படும் வசதிகள் குறித்து கேட்டார்.
அங்கிருந்து ஆயக்குடி சென்ற ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசினார். பின்னர் பழநி சென்ற ஸ்டாலின் காந்தி மார்க்கெட், பழைய தாராபுரம் ரோடு பகுதிகளில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் சந்தித்துப் பேசினார். பின்னர் ஒட்டன்சத்திரம் வந்த ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களுடனேயே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.மாலையில் அங்கிருந்து வேடசந்தூர் செல்லும் ஸ்டாலின், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். ஆத்துமேடு கடையில் டீ சாப்பிடுகிறார். பின்பு விவசாயிகள் நினைவுத்தூணிற்கு அஞ்சலி செலுத்தவிட்டு மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல் செல்கிறார். மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசி விட்டு இரவு 7 மணிக்கு தனியார் ஓட்டலில் தோல் வர்த்தகர்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் கோபால்பட்டியில் பொதுமக்கள் மத்தியில் பேசி விட்டு நத்தம் செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு சிவகங்கை செல்கிறார். நாளை சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.