கேரள அரசின் இணையதளம் பாகிஸ்தானால் திடீர் முடக்கம் : பேஸ்புக் தகவலால் பரபரப்பு
9/28/2015 2:12:37 PM
திருவனந்தபுரம்: கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தான் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் பல இணைய தளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ‘ஹக்கர் கும்பல்’ முடக்குவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் இந்திய தேசிய கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் பாகிஸ்தான் சிந்தாபாத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி கேரள சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் இணையதளத்தை முடக்கியது பாகிஸ்தானை சேர்ந்த பைசல் என தெரியவந்தது. sul injunction என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேரள அரசு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பைசல் தனது பேஸ்புக்கில், ‘’ கேரள அரசின் இணைய தளத்தை முடக்கியது தான்தான் என்றும், கடந்த 2009ம் ஆண்டு முதல் இதேபோன்று பல இணையதளங்களை முடக்கியதாகவும் தெரிவித்துள்ளார். முடக்கப்பட்ட கேரள இணையதளத்தை சீரமைக்கும் முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில் இணையதள பக்கம் சரிசெய்யப்பட்டது. இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த மல்லு வாரியர்ஸ் என்ற இணைய தளத்தை முடக்கும் ஒரு கும்பல், பாகிஸ்தனை சேர்ந்த பல அரசு இணையதளத்தை முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள மேலும் பல ஹக்கர் கும்பல்கள் பாகிஸ்தானின் 120 இணைய தளங்களை முடக்கியதாக தகவல்கள் தெரியவருகிறது.