காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
9/28/2015 2:08:41 PM
காஞ்சிபுரம்: அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று உத்திரமேருரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கிவைத்து இந்திய தொழிற்சங்க மையத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் பேசினார்.
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத திட்டங்களை கைவிட்டு விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், சத்துணவு, கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் 15 ஆயிரம் வழங்கிட வேண்டும், உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.