உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 200 சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு
9/27/2015 2:39:48 PM
புதுடெல்லி: உலக சுற்றுலா தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி நாடு முழுவதும் உள்ள 200 சுற்றுலா தலங்களை இலவசமாக பார்வையிடலாம் என மத்தி யஅரசு அறிவித்துள்ளது. உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த தினத்தையொட்டி இன்று ஒரு நாளில் மட்டும் தாஜ் மகாலை சுமார் 30 ஆயிரம் பேர் இலவசமாக பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 200 முக்கியமான சுற்றுலா தலங்கள், பாரம்பரிய இடங்கள் ஆகியவற்றை இலவசமாக காணலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அளித்துள்ளார். உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்கள், தாஜ் மகால் போன்ற புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புகழ் பெற்ற பாரம்பரிய இடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட 200 இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு களிக்கலாம். இங்கு அரசால் வசூலிக்கப்படும் கட்டணம் இன்று ஒரு நாள் மட்டும் வசூலிக்கப்பட மாட்டாது.
அதற்கு பதிலாக அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் என்றார். அதே நேரம் பீகாரில் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே பீகாரில் மட்டும் இந்த நடைமுறை இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த ஜூனில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே போல் கடந்த ஜுனில் 5.05 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரையில் 5.13 லட்சமாக இது உயர்ந்துள்ளது என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக ஐநா கடந்த 1980ம் ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.