ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு எரி சாராயம் கடத்தல்: 2 பேர் கைது
9/26/2015 12:40:54 PM
திருத்தணி: சோளிங்கர் அருகே உள்ள மூங்கிலேரி பகுதியில் ஆர்கே.பேட்டை கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ ஜனார்த்தனம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக்கில் போலீசார் சோதனை போட்டனர். அதில் 4 மூட்டைகளில் 120 லிட்டர் எரிசாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். சாராயம் கடத்திவந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.பிடிபட்ட நபர் வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ள வாங்கூர் கிராமத்தை சேர்ந்த பாபு (24) என தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயம், பைக்கை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி-சித்தூர் சாலையில் உள்ள பீரகுப்பம் பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரது சட்டைக்குள் 35 லிட்டர் எரிசாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரித்ததில் அய்யங்கண்டிகை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (25) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 35 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பாபு, விஜயகுமார் ஆகியோரை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.