ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தறுத்து கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
9/26/2015 12:38:34 PM
ஸ்ரீபெரும்புதூர்,: ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை போரூர் மங்கலா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பாபு (50). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். குன்றத்தூர் அருகே கோவூரை சேர்ந்தவருடன் பங்குதாரராக ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஆனந்தி (40). இவர்களது மகன் விஜய் (20). கல்லூரியில் படிக்கிறார். கடந்த 2 மாதத்துக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தி, அவரது பெற்றோர் வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டார். மேலும் அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை பொருட்களையும் கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் திண்டிவனம் மற்றும் மேல்மருவத்தூர் உள்பட பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, அதனை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வந்தார் பாபு. அதில் திண்டிவனத்தில் உள்ள நிலத்தை பார்த்து விட்டு பணம் கொடுத்து விட்டு வருவதாக அலுவலக ஊழியர்களிடம் கூறிவிட்டு காரில் நேற்று காலை புறப்பட்டார். அங்கிருந்து மாலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் அடுத்த எருமையூர் அருகே சர்வீஸ் சாலையில் பாபு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொழில் போட்டியில் பாபு கொலை செய்யப்பட்டரா, குடும்ப தகராறில் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா, அவர் கொண்டு சென்ற பணம் என்ன ஆனது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். கொலையாளிகளை பிடிக்க மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் ஐயனாரப்பன், எஸ்ஐ குப்பன், ஒரகடம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.