செவிலிமேடு அரசு பள்ளியில் நவீன கழிவறை
9/26/2015 12:25:30 PM
காஞ்சிபுரம்: செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையை, ரூ.50 ஆயிரம் செலவில் தனியார் வங்கி இலவசமாக புதுப்பித்து கொடுத்தது. இந்த கட்டிடம் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடம் சில மாதங்களாக பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள குளக்கரை மற்றும் வயல் பகுதிகளை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தை சீர் செய்ய தனியார் வங்கி முன் வந்தது. கடந்த மாதம் துவக்கப்பட்ட இப்பணி கடந்த இரு தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராம் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் பெடரல் வங்கி மேலாளர் சுவாமிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர். விழாவிற்கு தனியார் வங்கி நிறுவன அதிகாரிகள் தியாகு, ராஜேஷ், கவிதா, அருண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.