தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல காங்கிரஸ் : பாஜ மீது பாய்ச்சல்
9/26/2015 12:20:54 PM
புதுடெல்லி: பாஜவை போல காங்கிரஸ் தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல என அதன் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா நிருபர்களிடம் கூறுகையில், மூத்த தலைவர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. மூத்த தலைவர்கள் ஆலோசனை குழுவுக்கு தள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுவது கிடையாது. ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட இளம் தலைவர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே பூசல் நடப்பதாக கூறப்படுகிறது. அப்படி எதுவும் கட்சிக்குள் கிடையாது. இளைஞர்களும், மூத்தோர்களும் இணைந்து சோனியா, ராகுல் தலைமையில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றார்.
மும்பையில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் அண்மையில் அளித்த பேட்டியில் மூத்த தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களை செயல்பட விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து கேட்ட போது, இளைஞர்களுக்கு அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு பதவி அளிக்கப்படுகிறது. அது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ராகுல் காந்திதான் தலைவர்களை நியமித்தார்.
பஞ்சாபில் மாநில தலைவர் பிரதாப் சிங் பஜ்வாவுக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பாஜவை போல காங்கிரஸ் தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல என்று மறைமுறைகமாக மோடியை சுர்ஜேவாலா தாக்கினார். மேலும் அவர் கூறுகையில், மூத்த தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கருதவில்லை. பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி போன்றோரை ஆலோசனை குழுவுக்கு அனுப்பியது போல மூத்த தலைவர்களை காங்கிரஸ் ஒரு போதும் நடத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.