நவீன முறையில் பெட்ரோல் டீசல் கொள்ளை பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், ஆயில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்குமா?
9/26/2015 12:18:02 PM
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் ஏஜென்சி மூலம் பெரும்பாலானவர்கள் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்களே நவீன கைபம்ப்புகளை நிறுவி, பெட்ரோல் பங்க்கை அழகுபடுத்தி தருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சீருடை முதல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது.எனினும், இத்தகைய பெட்ரோல் பங்க்குகளில் சமீபகாலமாக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து நவீன முறையில் பெட்ரோல் கொள்ளை அடிக்கப்படுகிறது.பெரம்பூர், வளசரவாக்கம், புழல், மாதவரம், சோழிங்கநல்லூர், சாலிகிராமம், மடிப்பாக்கம், குன்றத்தூர், பூந்தமல்லி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் உள்ள ஒருசில பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போட வரும் வாகன ஓட்டிகளிடம் தொகையைக் கேட்டு ஊழியர்கள் பம்ப்பில் உள்ள கால்குலேட்டரில் பதிவு செய்கின்றனர்.
பின்னர் பெட்ரோல் பம்ப்பை எடுத்து வாகனத்தில் பொருத்தி, அதன் விசையை வேகமாக அழுத்துகின்றனர். இதனால் சிறிது நேரத்தில் ரூ. 30 அளவில் மீட்டர் வேகமாக ஓடுகிறது. ஆனால், பெட்ரோல் சாதாரணமாகவே செல்கிறது. இதன்மூலம் பங்க் ஊழியர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்று வாகன ஓட்டிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர், கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க்கில் தனது இருசக்கர வாகனத்துக்கு ரூ. 100-க்கு பெட்ரோல் போட்டார். ஊழியர் பெட்ரோல் பம்ப்பின் விசையை அழுத்தியதும், அது வேகமாக ஓடியதைக் கண்டு நிறுத்துமாறு கூறினார்.‘ஏன் ரூ. 30 வரை வேகமாக ஓடுகிறது? பெட்ரோல் மட்டும் சாதாரணமாக வருகிறதே?’ என்று பெட்ரோல் ஊழியரிடம் கேட்டிருக்கிறார். ‘அது அப்படித்தான் வரும்’ என்று ஊழியர் மிரட்டியிருக்கிறார்.
இதேபோல், எருக்கஞ்சேரியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் பெரும்புதூருக்கு சவாரி சென்றிருக்கிறார். அவர் பூந்தமல்லியில் தனது காருக்கு ரூ. 500-க்கு டீசல் போட்டார். அப்போது மீட்டர் வேகமாக ஓடியதைக் கண்டு, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, தன்னிடம் இருந்த ஸ்கேலால் டீசலின் அளவை பரிசோதித்தார். அவரது சோதனையில், டேங்க்கில் சுமார் 2 லிட்டர் டீசல் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் பலத்த வாக்குவாதம் செய்த பிறகே, குறைவான டீசலை மீண்டும் போட்டிருக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கூறுகையில், ‘சென்னை நகரில் உள்ள பெரும்பாலான தனியார் பெட்ரோல் பங்க்குகளில் நவீன பெட்ரோல் பம்ப்புகளை கோளாறு என்று கூறி அகற்றிவிட்டு, பழைய பம்ப்புகளையே உபயோகப்படுத்தி வருகின்றனர்.
அந்த பம்ப்புகளை இயக்கும் ஊழியர்கள், அதன் விசையை அழுத்திப் பிடித்தபடி சிறிது நேரம் நிற்கின்றனர். அதன்பின் விட்டுவிடுகின்றனர். அவர்கள் அவ்வாறு அழுத்தி பிடிப்பதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 மில்லி அளவு பெட்ரோல் மிச்சம் பிடித்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்குத்தான் நஷ்டம். அவர்களுக்கு லாபம். பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் தரம் மற்றும் எடை குறைந்த பெட்ரோல், டீசல் போடப்படுகிறது. இந்த பெட்ேராலினால் அதிக அளவு புகை மற்றும் குறைவான மைலேஜ் மட்டுமே மிஞ்சுகிறது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனங்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி சோதனை நடத்தினால், அவர்களின் தில்லுமுல்லுகள் நிச்சயம் வெளிவரும்’ என்று ஏக்கத்துடன் கூறுகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘எங்கள் பங்க்குகளில் நவீன முறையில் எலெக்ட்ரானிக் பதிவுடன் பம்ப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உங்களுக்குத் தேவையான பெட்ரோலின் தொகையை அதில் பதிவு செய்வோம்.பின்னர் மெமரி கார்டை சென்சாரில் தேய்த்து, பெட்ரோல் பம்ப்பின் விசையை சாதாரணமாக அழுத்தினாலே, அத்தொகைக்கான பெட்ரோல் வந்து நிரம்பும். இதில் மோசடிக்கு இடமில்லை’ என்று கூறுகின்றனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைக்கு குடிநீர் வைக்கப்படுவது இல்லை. அங்குள்ள டாய்லெட்டுகளும் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. சில பங்க்குகளில் ‘இலவச காற்று’ என்று போர்டு வைத்துவிட்டு, டூ வீலருக்கு ரூ. 4-ம், கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ரூ. 20-ம் அடாவடியாக கேட்டு பெறுகின்றனர்.‘பெட்ரோல், டீசல் விலையை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததைப் போல், அதன் அளவையும் குறைக்கச் சொல்லிவிட்டார்களோ?’ என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள்தான் ஆய்வு நடத்தி, சரியான பதிலை அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலுக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகின்றனர். இந்நிலையில், பங்க்களில் சரியான அளவில் பெட்ரோல் வழங்காவிட்டால் ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே, பங்க்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க முன்வர வேண்டும். அதேபோல், வாகன ஓட்டிகளும் விழிப்புடன் இருப்பது அவசியம். பெட்ரோல் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும். அளவு குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.