உளவுத்துறை அதிகாரி கடத்தி கொலை : மேகாலயாவில் தீவிரவாதிகள் வெறிச்செயல்
9/26/2015 12:16:52 PM
புதுடெல்லி: மேகாலயாவில் தற்போது புதிதாக ஏஎஸ்ஏசி என்ற தீவிரவாத இயக்கம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இங்கு செயல்பட்டு வந்த ஏஎன்விசி என்ற அமைப்பில் இருந்து பிரிந்து வந்த இந்த இயக்கத்தினர் மேகாலயாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நேற்று சர்வதேச எல்லை பகுதியில் உள்ள தெற்கு கரோ மலைப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது அவர் உளவுத்துறை அதிகாரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பிகாஷ் சிங் என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி கமல் சாகா என்பவருடன் சேர்த்து இருவரையும் துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் பிகாஷ் சிங்கை கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட கமல் சாகா நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.