ரூ. 2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது
9/26/2015 12:15:12 PM
திருமலை: திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 68 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் உள்ள பார்வேட்டை மண்டபம் வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செம்மர கடத்தல் கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததை போலீசார் அறிந்து அங்கு விரைந்தனர். அதிகாரிகளை கண்டதும் செம்மர கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. உடனே அவர்களை தொடர்ந்து விரட்டி சென்ற செம்மர தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தக்கோடு கிராமத்தை சேர்ந்த பூபாலன் (37), கோவிந்தன் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெட்டி கடத்துவதற்காக வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள 68 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி சென்ற செம்மர கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.