வலங்கைமான் பகுதியில் தினமும் 9 மணி நேரம் மின்வெட்டு
9/26/2015 12:14:50 PM
வலங்கைமான்: தமிழக சட்டசபையில் நேற்று நடந்த மின்துறை மானிய கோரி்க்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மின் வெட்டே இல்லை என்று கூறினார். ஆனால் அவர் கூறியதற்கு மாறாக மாநிலம் முழுவதும் பரவலாக கடும் மின் வெட்டு நிலவி வருகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணைமின் நிலையத்திலிருந்து ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தக்குடி, ஆவூர், கீழவிடையல், மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யபட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சுழற்சி முறையில் பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரத்திற்கு மேலாகவும் மின் வெட்டு நிலவி வருகிறது.தற்போது கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் மின்வெட்டால் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் 9 மணி நேரத்திற்கும் குறைவாகவே மும்முனை மின்சாரம் வருவதால் விவசாயிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுவது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பிற்கு ஆளாக்கி உள்ளது.