துபாய் விமானம் மக்கர் 329 பயணிகள் தப்பினர்
9/25/2015 3:11:04 PM
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 321 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 329 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதைக்கு சென்றபோது சக்கரங்களில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தும்படி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இழுவை வண்டிகள் மூலம் விமானம், இழுத்துவரப்பட்டது. விமான நிலைய பொறியாளர் குழுவினர், பழுதை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் நான்கரை மணி நேர போராட்டத்துக்கு பின் காலை 8.30 மணிக்கு சரி செய்யப்பட்டு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் பழுதை விமானி கண்டுபிடித்ததால் 329 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.