3ம் நாள் பொங்கல் முன்பதிவு 10 நிமிடங்களில் ரயில்கள் ஹவுஸ்புல்: காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்
9/16/2015 3:25:35 PM
சென்னை: போகியன்று அதாவது ஜன.14ம் தேதி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான பொங்கல் முன்பதிவு 3வது நாளாக இன்று நடைபெற்றது. பெரும்பான்மையான ரயில்களில் 10 நிமிடங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இடங்கள் தீர்ந்தன.வரும் ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமை போகியும், ஜன.15ம் தேதி வெள்ளிக்கிழமை பெரும்பொங்கலும், ஜன.16ம் தேதி சனிக்கிழமை மாட்டுப்பொங்கலும், ஜன.17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளன. பொங்கலுக்கு இன்னும் 4 மாதங்கள் முழுமையாக உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பொங்கல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. போகியன்று ஜன.14ம் ேததி வியாழக்கிழமை செல்லும் ரயில்களுக்கான பொங்கல் முன்பதிவு 3வது நாளாக இன்று காலை தொடங்கியது.பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான 2ம்வகுப்பு தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு இடங்கள்தான் 6 நிமிடங்களில் தீர்ந்தன.
இந்த ரயிலில் இன்றுகாலை 8.36 மணி நிலவரப்படி காத்திருப்பவர்கள் பட்டியலில் இருப்பவர்களின் எண்ணிக்கை 400ஐ தொட்டது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் சேரன், நீலகிரி, ஏற்காடு, சேலம், பொதிகை, பழனி, மன்னை, உழவன், சேலம் என பெரும்பான்மையான ரயில்களில் 2ம் வகுப்பு முன்பதி–்வு இடங்கள் தீர்ந்து விட்டன.மேலும் நேற்று வேகம் காட்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இடங்கள் தீர 20 நிமிடங்கள் ஆகின. கன்னியாகுமரி, ராமேஸ்வரம்(இரவு) ரயில்களில் இடங்கள் தீர 40 நிமிடங்கள் ஆனது.பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர மற்ற ரயில்களில் 3 அடுக்கு ஏசி வகுப்புக்கான இடங்கள் மெதுவாக தீர்ந்து வருகின்றன. வழக்கம் போல் பகல் நேர ரயில்களில் இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. விடுமுறைதான் விழா, கொண்டாட்டங்களை முடிவு செய்கிறது. அதனால் பெரும்பொங்கல் அன்றுதான் அதாவது ஜன.15ம் தேதி ஊருக்கு செல்ல முடியும் என்பவர்கள் நாளை முன்பதிவு செய்யலாம்.