வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்
9/5/2025 12:53:18 PM
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்காக அங்குள்ள மருத்துவமனையில் 2 டாக்டர்கள் தலைமையில் மருத்துவக்குழுக்கள் உள்ளன. வேலூர் சிறை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணகி. இவர் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட செல்ேபான் மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சீசிங் ராஜா உள்ளிட்ட பல முக்கிய கொலை குற்றவாளிகளுக்கு இதய கோளாறு உள்ளதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காகவும் பரிந்துரை செய்து அதற்காக பணத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் டாக்டர் கண்ணகியை அழைத்து நேரிலேயே கண்டித்துள்ளனர். அதற்கு டாக்டர் கண்ணகி சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இறந்த முபாரக், மணிகண்டன் ஆகியோரை சிறைத்துறை அதிகாரிகள் அடித்து கொலை செய்ததாக கூறி உங்கள் மீது புகார் அளிப்பேன் என மிரட்டினாராம்.
இந்த விவகாரம் உட்பட வேலூர் மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் குறித்து சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் டாக்டர் கண்ணகி, சிறையில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்ததும், அங்கு அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளுக்கு சலுகை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் கண்ணகி கடந்த 31ம் தேதி முதல் சிறைத்துறையில் இருந்து இடமாற்றம் செய்து குடியாத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.