கும்பகோணம் ராமசாமி கோயிலில் 9ம் தேதி கும்பாபிஷேகம் : நாளை யாக சாலை பூஜை துவக்கம்
9/5/2025 12:22:18 PM
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோவில்களுள் ஒன்று கும்பகோணம் ராமசாமி கோயில். மகாமகம் தொடர்புடையை வைணவ கோயில்களில் பிரதானமானது. வெளிமண்டபத்தில் 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைபாடுகளுடன் கலைக்கோயிலாக உள்ளது. உள்பிரகாரத்தில் ராமாயண ஓவியங்கள் அமையப்பெற்றுள்ளன. மகாமக திருவிழாவை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி செலவில் இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களையும் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இத்திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகப்பணிகள் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மூன்றரை அடி உயரம் கொண்ட மூலவர் கோபுர கலசம், தலா 7 அடி உயரம் உடைய தங்க முலாம் பூசப்பட்ட 7 ராஜகோபுர கலசங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கருடவாகனம் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் ஆகியவைகள் கோயிலில் நிர்மாணிக்கப்பட உள்ளன. மேலும் கோயிலில் 7வது திருநாளன்று நடைபெறும் சூர்னோஸ்வம் விழாவில் ராமர் சீதை, லட்சுமணர் புறப்பாடு நடைபெறும். ஏற்கனவே கோயிலில் இருந்த கோரதம் சிதிலமடைந்ததால் சென்னை உபயதாரர் மூலம் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் முழுவதும் தேக்கு மரத்திலான கோரதம் தயார் நிலையில் உள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட கோரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கசலங்கள், மூலவர் கோபுர கலசம், தங்கமுலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவைநேற்று கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. கும்பாபிஷேக விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நாளை காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து ஏழு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, 9ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.45 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.