மணப்பாக்கத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் : அதிமுகவினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்காமல் ஓயமாட்டோம் : மா.சுப்பிரமணியன் ஆவேசம்
9/4/2025 3:26:53 PM
ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் உள்ள கோலியம்மன் கோயில் நிலத்தையும் குடிநீர் குளத்தையும் வீட்டுமனை பிரிவுகளாக மாற்றி ரூ. 100 கோடிக்கு மேல் விற்று சுருட்டிய அதிமுகவினரின் ஊழல், ஊதாரிதனத்தை கண்டித்து, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பாக, இன்று காலை மணப்பாக்கம், அம்பேத்கர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே.இப்ராகிம், பகுதி அவைத்தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், நிலங்களை அபகரித்த அதிமுகவினருக்கு எதிராகவும், துருப்பிடித்த அதிமுக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினார். அதைத் தொடர்ந்து ஏராளமான திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
மணப்பாக்கம், ஆதம்பாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் நீராதாரங்களை மடக்கி, வீட்டுமனைகளாக விற்பனை செய்து வருகின்றனர். டான்சி நிலத்தை மீட்டது போலவே, அதிமுகவினர் கையகப்படுத்தி விற்று வரும் நிலங்களை மீட்பதற்கும் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:மணப்பாக்கத்தில் வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 99 சென்ட் நிலம், கோலியம்மன் கோயிலுக்கு சொந்தமான 62 சென்ட் நிலம், வேம்புலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 சென்ட் நிலம் போன்றவற்றை அதிமுகவினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலங்களை மீட்டு தமிழக அரசு கையகப்படுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அந்த இடங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும். இவர்கள்மீது அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் தமிழக முதல்வரை உள்ளே வரவிட அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கவி, மாவட்ட துணை செயலாளர் த.விஸ்வநாதன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கோல்டு பிரகாஷ், ரத்தினம், முரளி கிருஷ்ணன், எஸ்.பாஸ்கரன், அரவிந்த் ரமேஷ், மதியழகன், ரவிச்சந்திரன், எம்.கே.ஏழுமலை, ஸ்ரீகாந்த், கவுன்சிலர் முத்து, நகர இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெயராம் மார்த்தாண்டன், முனுசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஏசுதாஸ், கீதா ஆனந்த், நடராஜன், அழகேசன், கலாநிதி, ரமேஷ், நந்தம்பாக்கம் சேகர், கருணாநிதி, மலர்மன்னன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.