இலங்கை எதிர்கட்சி தலைவராக 38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் தலைவர் சம்பந்தன் நியமனம்: சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு
9/3/2025 2:10:25 PM
கொழும்பு: இலங்கையின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் ஜெயசூர்யா இன்று வெளியிட்டார். இலங்கையில் கடந்த 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ரணில் விக்ரமிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ராஜபக்ஷே சார்ந்த இலங்கை சுதந்திரா கட்சி இரண்டாம் இடத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 3ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதை தொடர்ந்து ரணில் விக்ரமிங்கே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். திடீர் திருப்பமாக ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரா கட்சியும் இணைந்து தேசிய அரசை அமைக்க முடிவு செய்தன. இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தேசிய அரசின் சபாநாயகராக சிறி சேன கட்சியைச் சேர்ந்த கரு ஜெய சூர்ய நேற்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தேசிய அரசில் பங்கேற்காத தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணிலுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக நியமிக்க அதிபர் சிறிசேனா ஒப்புக் கொண்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சபாநாயகர் ெஜயசூர்யா இன்று வெளியிட்டார். 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 1977ம் ஆண்டு ஜெயவர்தனா அதிபராக இருந்த போது அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.