குமரியில் கடல் சீற்றம் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்
9/2/2025 3:01:47 PM
புதுக்கடை: தேங்காப்பட்டணம் கடலில் சீற்றம் ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன.குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று காலை மீண்டும் கடல் அலையின் வேகம் அதிகரித்தது. தேங்காப்பட்டணத்தில் தடுப்பு சுவர்களையும் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் முள்ளூர்துறை, ராமன்துறை, தேங்காப்பட்டணம் துறைமுக பகுதி மக்கள் பாதிப்படைந்தன.ராமன்துறை கிராமத்தில் குருசடி பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர் இல்லாத பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதி மக்கள் வேறு பகுதியில் தஞ்சமடைந்தனர். முள்ளூர் துறை கிராமத்தில் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்தது. இதில் சாலைகள் சேதமடைந்தது.மேலும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதி குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அரையன் தோப்பு, முள்ளூர் துறை, ராமன்துறை பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது. கடல் சீற்றம் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.