சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அதிமுகவினரை கண்டித்து 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
9/2/2025 2:28:07 PM
சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாநகராட்சி 157வது வார்டு மணப்பாக்கம் பகுதியில் இருந்த குளம் ஒன்று நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அதிமுக பெரும்புள்ளிகள் சிலரால் தற்போது அந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிமுகவினரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறான முறையில் மின்சார வாரியத்தின் மூலம் மின்வாரிய அதிகாரிகளால் மின் இணைப்பும்கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அப்பகுதியில் உள்ள கோலியம்மன் கோயிலுக்கு சொந்தமான 85 செண்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து பல கோடிக்கு விற்றுவிட்டனர். எனவே பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் அதிமுகவினரை கண்டித்தும், கோயில் நிலத்தை மீட்க கோரியும் வரும் 4ம் தேதி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மணப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே வரும் 4ம் தேதி என் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் நடக்கிறது. ஆர்பாட்டத்தில் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் பி.குணாளன், ஆலந்தூர்தெற்கு பகுதிச் செயலாளர் என்.சந்திரன், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராஹிம் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மாநில அணிகளின் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து பகுதிக் கழக செயலாளர்கள் என ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, ஆர்பாட்டத்துக்கு கழக தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களின் கண்டக் குரலை எழுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.