தெற்கு ரயில்வே அலுவலர் பலியான விவகாரம் : பெண் டாக்டர் அதிரடி இடமாற்றம்
9/2/2025 2:27:45 PM
சென்னை: தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அலுவலருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை தெற்கு ரயில்வே தலைமை வளாகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் 3 மாடியில் உள்ள முதுநிலை கோட்ட பணியாளர் அதிகாரி அலுவலகம் உள்ளனர். அதில் அலுவலக கண்காணிப்பாளராக இருந்தவர் ராமதிலகம்(59). சென்னை கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு நேற்று பகல் 2.45 மணிக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதனை பக்கத்தில் இருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அதே வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ராமதிலகத்தால் நடக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார்.
அதனால் உடனடியாக மருத்துவ மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால அது அவர்களுக்கு உணவு நேரம் என்பதால் ‘டாக்டர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்’ கீழே அழைத்து வந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் ரயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் சத்தம் போடவே நர்ஸ் ஒருவர் 3 வது மாடிக்கு சென்றுள்ளார். ராமதிலகத்தை பரிசோதனை செய்துள்ளார். பின்னர் ‘சர்க்கரை நோய் இருந்தால் கூட இப்படி நேரலாம். எனவே கீழே அழைத்துச் சென்று விடலாம். வேறு சிகிச்சைக்கும் வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதற்குள் ராமதிலகம் மயங்கியுள்ளார். பின்னர் மருத்துவ மையத்தில் தூக்குப்படுக்கை, சக்கர நாற்காலி வசதி எதுவும் கிடைக்காததால் சக ஊழியர்கள் 4 பேர் ராமதிலகத்தை தூக்கிக் கொண்டு கீழே உள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராமதிலகத்தை சோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். நிர்வாகத்தின் மீது இருந்த ஆத்திரத்தால் ஊழியர்கள் ராமதிலகத்தின் உடலை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர். பூக்கடை போலீசார் வந்து சமாதானப்படுத்தியும் பலனில்லை. போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், சம்பந்தப்பட்ட டாக்டர் அன்னா கவிதா சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்ட ஆணையை காட்டினர். அதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.