அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடியை உடனே தீர்க்க வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
9/2/2025 2:27:02 PM
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. நிர்வாகம் மாறினாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொத்த வருமானம் ரூ.350 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் பல்கலைக்கழகத்தின் ஆண்டு செலவு ரூ.700 கோடியாக உயர்ந்து விட்டது. மேலும், பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.500 கோடியாக அதிகரித்துள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பல்கலைக்கழகத்தின் செலவுகள் ஆண்டுக்கு ரூ.1000 கோடி ஆக உயர்ந்து விடும். எனவே, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க சிறப்பு நிதியாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அதனுடன், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்ய தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.