வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
9/2/2025 2:26:21 PM
சென்னை: அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுத் துறைகளின் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன. இந்த வேலை நிறுத்தத்திற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒற்றுமையின்மை காரணமாக வழக்கம் போல் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
அகில இந்திய ரயில்நிலைய அதிகாரிகள் சங்கம் சார்பில் இன்று பகல் 11.30மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சென்னைக் கோட்டம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்நிலைய அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.இதேபோல் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம்(எஸ்ஆர்எம்யூ) சார்பில் இன்று உணவு இடைவேளையின் போது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மேலும் தென்பகுதி ரயில்வே ஊழியர் சங்கம்(எஸ்ஆர்ஈஎஸ்), தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம்(டிஆர்ஈயூ), அகில இந்திய எஸ்சி/எஸ்டி ஊழியர்சங்கங்கள் இணைந்து இன்று மாலை பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தின.