சபாநாயகரின் செயலை கண்டித்து சட்டசபையில் திமுக வெளிநடப்பு
9/2/2025 2:26:00 PM
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசினார். அப்போது, ‘திண்டுக்கல்லில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் அங்குள்ள நீர்தேக்கத்தின் அருகே தனியாருக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை எதிர்த்து, மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டேன்’ என்றவர், இதைத் தொடர்ந்து அவர் பேசிய சில வார்த்தைகளை சபாநாயகர் தனபாலன், அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதற்கு திமுக உறுப்பினர்கள், ‘அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.இதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியது:
சபாநாயகர் சர்வாதிகாரமாக பேசுவதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ேளாம். கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லா நேரத்தில் ஏற்கனவே மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து அறிக்கையை நீதிபதி ரகுபதி, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. பக்கம் 30, 31, 41 ஆகிய பக்கங்கள் இணைப்பு என கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் இந்த பக்கங்கள் சேர்க்கப்படவில்லை. அதை வழங்க கோரி சபாநாயகருக்கும், சட்டசபை செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுகுறித்து பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து 50 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 30 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அதுபற்றி பேசவும் சபாநாயகர், அனுமதி தரவில்லை. மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஜெ.அன்பழகன் சில கருத்துக்களை கூறினார். அதையும் குற்றச்சாட்டாக சொல்லவில்லை. குறைபாடாகத்தான் சொன்னார். அவற்றை எல்லாம் அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்க சொல்லி விட்டார்.நேற்று சுற்றுச்சூழல் அமைச்சர், ‘திமுக ஆட்சியில்தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காசு கட்டுப்பாட்டு வாரியமாக மாறிவிட்டது’ என்று கூறினார். அதை மட்டும்அவை குறிப்பில் இருந்து நீக்கவில்லை. சபாநாயகர் ஏற்று கொள்கிறார். இதை விட அவமானம், கேவலம் எதுவும் இல்லை. ஆளுங்கட்சியினர், பஜனை பாடவும், துதி பாடவும் மட்டுமே சபாநாயகர் செயல்படுகிறார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.