ஊரப்பாக்கத்தில் பள்ளி மாணவி கடத்தல்? போலீஸ் விசாரணை
9/2/2025 1:53:50 PM
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் 10ம் வகுப்பு மாணவி மாயமானர். இதில் அவரது புத்தக பை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் கிடந்தது. இதனால் அவர் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ராஜிவ் காந்திநகர் கங்கா தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் லட்சுமிபிரியா(17). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அவரது உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் லட்சுமிபிரியாவின் புத்தக பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தை சுற்றி காலை மற்றும் மாலை நேரங்களில் மர்ம கும்பல் சுற்றி திரிகின்றனர். இங்கு பஸ் ஏற வரும் மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். மேலும் சிலர் கார், வேன், பைக், ஆட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து மணி கணக்கில் பார்க்கிங் செய்துவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் வருவதையறிந்தால் ஓட்டம் பிடிக்கின்றனர். எனவே இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.