விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சென்னை வாலிபர் லாக்அப்பில் மர்ம சாவு : 2 எஸ்ஐ, போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
9/2/2025 1:52:53 PM
வில்லியனூர்: விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர், லாக்கப்பில் உயிரிழந்தார். இதுசம்பந்தமாக 2 எஸ்ஐக்கள், போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.புதுவை வில்லியனூர் அடுத்த டி.என்.பாளையம் நடராஜன் நகரில் வசித்தவர் முத்துக்குமரன் (31). இவர் சென்னையை சேர்ந்தவர். வெட்டியான். இவரது மனைவி சுமதி. இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.முத்துக்குமரனை கடந்த 4 நாட்களுக்கு வில்லியனூர் போலீசார், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை இவர், காவல் நிலைய லாக்அப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார், மாவட்ட நீதிபதிக்கு தகவல் கொடுத்தனர். சீனியர் எஸ்பி சந்திரன், எஸ்பி பைரவசாமி மற்றும் அதிகாரிகள் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையில் முத்துக்குமரன் இறந்தது பற்றி அறிந்ததும் உறவினர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் திரண்டனர். திடீரென அவர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அடித்ததில்தான் முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்று கோஷங்கள் போட்டனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முத்துக்குமரன் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் முத்துக்குமரன் மரணத்தின் போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்ஐக்கள் சஜீத், கணேசன், போலீஸ்காரர்கள் பத்மநாபன், அனந்தகிருஷ்ணன், செல்வம் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கண்ணன் ஜெகதீசன் உத்தரவிட்டு உள்ளார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.இதனிடையே முத்துக்குமரன் உறவினர்கள், இன்று காலையும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முத்துக்குமரன் மரணத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் வில்லியனூர் பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.