மகளை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
9/1/2025 2:27:48 PM
தூத்துக்குடி: நடத்தையில் சந்தேகப்பட்டு மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் சுந்தர்சிங் என்ற அலெக்ஸ் (41), கட்டிட தொழிலாளி. இவரது 15 வயது மகள் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தாள். மனைவியின் உறவினர் ஒருவருடன் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அலெக்ஸ் சந்தேகப்பட்டார்.இந்நிலையில் கடந்த 18.12.2024 அன்று காலை வீட்டில் தனியாக இருந்த மகளை சுந்தர்சிங் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். மெஞ்ஞானபுரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.இவ்வழக்கு விசாரணையின் போது மனைவி உள்பட குடும்பத்தினர் அனைவரும் சுந்தர்சிங்குக்கு எதிராகவே சாட்சியளித்தனர். மேலும் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி புளோரா விசாரித்தார். மகளை கொலை செய்த குற்றத்துக்காக சுந்தர்சிங் என்ற அலெக்சுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.