மாநகராட்சி கூட்டத்தில் சுவாரஸ்யம்
9/1/2025 2:15:58 PM
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று பிற்பகல் நடந்தது. கூட்டத்திற்கு, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது.அம்மா உணவகத்தால் ஏற்பட்ட பசி:நேற்று நடந்த மன்ற கூட்டத்தில், சென்னையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக முதல்வர் நல்ஆளுமை விருது வழங்கியதை பாராட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பேசி கொண்டிருந்தனர். அம்மா உணவகத்தை பற்றி பேசி கொண்டிருந்ததால் பசி ஏற்பட்டதைபோல உறுப்பினர்களில் சிலர் குழுகுழுவாக சேர்ந்து சிறிது நேர இடைவெளிக்கு ஒருமுறை மன்றத்திற்கு வெளியே சென்று தயாராக இருந்த கிச்சடியையும், வடையையும் சாப்பிட்டுவிட்டு கூட்டத்தில் மீண்டும் கலந்து கொண்டனர். ஏற்கனவே, 100க்கும் குறைவான உறுப்பினர்களே வந்திருந்த நிலையில் காலியாக காட்சியளித்த மன்றம், கிச்சடி மற்றும் வடையினால் மேலும் வெறிச்சோடி காணப்பட்டது.
‘ஆம்’ கவுன்சிலர்கள்:ஒவ்வொரு முறை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பு உறுப்பினர்களிடம் ஒப்புதல் கேட்க “ஏற்பவர்கள் ஆம் என்க எதிர்ப்பவர்கள் இல்லை என்க” என்று மேயர் கூறுவார். மன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை படிக்காமலேயே மேயர் அவ்வாறு கூறுவதற்கு ஆரம்பிக்கும் முன்பே “ஆம்” என்று கூறுவிடுவர். இவ்வாறு, நேற்று நடந்த கூட்டத்திலும் 61 முதல் 76 வரையிலான தீர்மானங்களை ஏற்பவர்கள் ஆம் என்க என்று கூறுவதற்கு முன்பே உறுப்பினர்கள் ஆம் என்று கூறினர். இதனால், ஆத்திரமடைந்த மேயர், முதலில் தீர்மானத்தை பாருங்கள் அதன் பிறகு ஆம் என்று கூறுங்கள் என்று அறிவுரை கூறினார்.
ஆங்கிலேய ஆணையருக்கு எச்சரிக்கை!:மன்ற உறுப்பினர் வாசன் பேசும் போது, ரிப்பன் மாளிகைக்கு நுழைவும் வாயிலில் ஒரு சிலை ஒன்று கால் மேல் கால் போட்டு அமர்வதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் நம் முன்பு எப்படி இப்படி உட்காராலாம். எனவே, அந்த சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு மேயர், அவர் முன்னாள் ஆங்கிலேய ஆணையர். இது குறித்து பதில் சொல்ல முடியாது. ஆய்வு செய்து அரசின் முடிவை பெற்றே முடிவு செய்ய முடியும் என்றார்.