அசாமில் கனமழைக்கு 6 பேர் பலி: 7 லட்சம் பேர் பாதிப்பு
9/1/2025 2:15:08 PM
கவுகாத்தி: அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரே நாளில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் ஹெக்டேர் விசாய நிலம் நீரில் மூழ்கியது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.அசாமில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலை போக்குவரத்து, தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. ஆடு, மாடுகள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.கனமழையால் 18 மாவட்டங்கள் கடுமையான சேதத்துக்கு ஆளாகி விட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். கனமழைக்கு 7 லட்சத்து 35 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் கனமழையால் சேதமடைந்தது. இதில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின.வீடுகளை இழந்து தவிப்போருக்காக முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு விட்டுதால் அங்கு மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்துவரும் கனமழையால் அசாம் மாநில மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கனமழைக்கு இதுவரை சுமார் 20 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.