வண்டலூரில் நவீன பேருந்து நிலையம்: இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை திணறல்
8/31/2015 2:26:15 PM
கூடுவாஞ்சேரி: வண்டலூரை அடுத்த வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி, ‘65.5 ஏக்கர் நிலப்பரப்பில் ₹376 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்று கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், வண்டலூரில் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முடியாமல் தமிழக வருவாய் துறையினர் திணறி வருகின்றனர்.வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தி, நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதற்கு பதில், ஊரப்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையோரம் காலியாக உள்ள 110 ஏக்கரில் நவீன பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் 110-வது விதியின்கீழ் ‘வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வெளிவட்ட சாலை, ரயில் நிலையம் அருகே வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமையும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இவை எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வரும் சிறு விவசாயிகளின் நஞ்சை நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
மேலும், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தபோது, ‘இனி வருங்காலங்களில் வண்டலூர் கிராமத்தில் கைப்பிடி மண்கூட எடுக்கக்கூடாது’ என்று உறுதியளித்திருந்தார்.வண்டலூரில் ஏற்கனவே உயிரியல் பூங்கா அமைப்பதற்காக, ஓட்டேரி ஏரி மற்றும் அதைச் சார்ந்த விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்றியது. ஜிஎஸ்டி நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் வண்டலூர்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கத்துக்கும் விவசாயிகளின் வீடுகளையும் வீட்டுமனைகளையும் இழந்துள்ளனர்.தற்போது வண்டலூர் பெரிய ஏரியின் நடுவே, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்து வருவதால் அங்கு குடியிருந்த ஏழை விவசாயிகளின் குடிசை வீடுகளும் அகற்றப்பட்டன. இதனால் வீடு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.வண்டலூரில் பாரம்பரியமாக உழுது பயிரிட்டு வந்த விவசாயிகளின் நிலங்களை தொடர்ந்து கைப்பற்றினால், அவர்களது வாழ்வாதாரமே முற்றிலும் அழிந்துவிடும்.வண்டலூருக்கு அருகே ஊரப்பாக்கத்தில் தனிநபர் வசம் இருக்கும் 110 ஏக்கர் கொண்ட அரசு புறம்போக்கு நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளின் பரீசீலனையில் இருந்து தப்பி போனது எப்படி?
‘நஞ்சை நிலத்தை ரியல் எஸ்டேட் ஆக்கக்கூடாது’ என்று சட்டம் இருக்கும்போது, நஞ்சை நிலங்களை பேருந்து நிலையத்துக்காக அரசு தேர்வு செய்தது எவ்வகையில் நியாயம்?’ என்று அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, ஊரப்பாக்கத்தில் தனிநபரிடம் இருக்கும் 110 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், நவீன பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வண்டலூர் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.இதனால் வண்டலூரிலும் ஊரப்பாக்கத்திலும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முடியாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.