சென்னையில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
8/31/2015 2:18:17 PM
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்துள்ளனர், 15,190 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவீதம் தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்துகளோடு ஒப்பிடும்போது 2014-இல் தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆனால், உயிர் இழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உயிரிழப்பு ஏற்படுத்தும் சாலை விபத்துகளில் 10.7 சதவீதம் தமிழகத்திலேயே ஏற்பட்டுள்ளன.
சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 26.4 சதவீதமும், 20.1 சதவீதம் லாரி மற்றும் கனரக ஓட்டுநர்களும்,12.1 சதவீதம் காரில் செல்பவர்களும், 8.8 சதவீதம் பேருந்து ஓட்டுநர்கள்- பயணிகள் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.அதேபோல விபத்துகளில் 27.5 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 25.2 சதவீதம் மாநில நெடுஞ்சாலைகளிலும் நடைபெறுகின்றன. இதேபோல 54.7 சதவீத சாலை விபத்துகள் நகர்ப் பகுதிகளிலும், 45.3 சதவீதம் கிராமப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் 13.4 சதவீத வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதாலும், 5.3 சதவீதம் மோசமான வானிலையின் காரணமாகவும், 2.8 சதவீதம் வாகனப் பழுது காரணமாகவும்,2.6 சதவீதம் மதுபோதையினாலும் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.சாலை விபத்து ஆண்டுக்கு, ஆண்டு அதிகரிப்பதற்கு முக்கியமாக வாகன ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுவது, மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது,சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகத்தில் செல்வது ஆகிய காரணங்களை போலீஸார் கூறுகின்றனர்.
இந்த சூழலில் பள்ளிகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என்ற கேள்வி குறி எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தாம்பரம் சேலையூரில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, அந்தப் பள்ளிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கிய பஸ்ஸில் பயணித்தபோது, இருக்கைக்கு அடியில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து பஸ்ஸின் பின் சக்கரம் ஏறி உயிரிழந்தாள். இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தமிழக அரசு,பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். முழு தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த டிரைவர் மற்றும் நடத்துனரை பணியமர்த்த வேண்டும். முறையான டிரைவர் விடுப்பில் செல்லும்போது டிரைவர் உரிமம் இல்லாத நபர் அல்லது கிளீனர் போன்றவர்களை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக்கூடாது. போக்குவரத்து துறையின் உத்தரவுப்படி பள்ளி வாகன பராமரிப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும்.
பள்ளி வாகனத்தை இயக்கும்போது டிரைவர் கைப்பேசியில் (செல்போன்) பேசுவது, தண்ணீர் அருந்துவது, குழந்தைகளுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. பள்ளி வாகனத்தை போக்குவரத்து விதிகளை மீறி இயக்கினால் புகார்களை தெரிவிக்க பள்ளி முதல்வர் அல்லது பள்ளி நிர்வாக அலுவலர் கைபேசி எண்ணை பள்ளி வாகனத்தில் எழுதி வைக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வளாகம், பாலம், நீர்நிலைகள் போன்ற இடங்களில் மிக கவனமாக டிரைவர் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 22 விதிமுறைகளை அறிவித்தது.ஆனால் இவற்றின் கீழ் பள்ளி வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். இதற்கிடையில் பொதுமக்கள் பயணத்திற்காக பயன்படுத்தப்படும் பொது வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவிகளை ஏன் பொருத்தக் கூடாது என வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு தரப்பில், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாததால் தான் அதிக உயிரழப்புகள் ஏற்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. எந்தெந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது என்று பற்றி ஆய்வு செய்கிறோம் என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்த சூழலில் பொது வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என்ற அவசியம் எழுந்துள்ளது. இதற்கிடையில் அங்கீகாரம் பெற்று இயக்கப்படும் கல்லூரி மற்றும் பள்ளிகள் தவிர சென்னை நகரம் முழுவதும் ஏராளமான அங்கீகாரம் பெறாத ஷேர் ஆட்டோக்கள், மேக்சி கேப்கள், ஆட்டோக்கள் ஆகியவை காலையும், மாலையும் அளவுக்கு அதிகமான குழந்தைகளை அடைத்துக் கொண்டு பள்ளிகளுக்கு சவாரி அழைத்து செல்வதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகப் பெரிய விபத்து ஏற்படாதவரை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இதை கண்டு கொள்வதில்லை. இதற்காக எந்த முறையான அனுமதியும் பெறப்படுவதுமில்லை. அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரி வாகனங்களை கூட அரசின் விதிமுறைகள், சட்ட திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியும். ஆனால் விதிமுறைகளை மீறி பொதி மூட்டைகளை போல ஆட்டோக்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் குழந்தைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசாரின் மெத்தனம் என்றே சொல்ல வேண்டும்.ஒருபுறம் அன்றாடம் பள்ளிக்கு பேருந்துகளில் அனுப்ப வசதியில்லாத குடும்பத்தினர் இது போன்று தங்களது குழந்தைகளை மொத்தமாக ஒரு தொகை பேசி அருகில் இருக்கும் ஆட்டோக்களின் மூலம் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இருந்த போதிலும் இதில் ஏற்படும் ஆபத்துகளை ஆட்டோ டிரைவர்களோ, பெற்றோர்களோ உணராமல் இருக்கலாம்.
ஆனால் ஆட்சியாளர்களும், போக்குவரத்து போலீசாரும், அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அண்மையில் ஆந்திராவில் இது போன்று பள்ளிக்கு அழைத்து சென்று மொத்தமாக ஆற்றில் விழுந்து வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதே போன்ற ஒரு அசம்பாவிதம் சென்னை நகரிலும் ஏற்படுவதற்கு முன்பாக அங்கீகாரம் இல்லாத முறையில் பள்ளி குழந்தைகளை பொதி மூட்டை போன்று ஷேர் ஆட்டோக்களிலும், ஆட்டோக்களிலும் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்வதை தடுக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். குறைந்த தொகையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிகிறதே என்று பெற்றோர்களும் இது போன்ற ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு அனுப்புவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.