ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 கட்டமாக கும்பாபிஷேகம்
8/24/2015 2:37:07 PM
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. கோயிலுக்கு 2001ம் ஆண்டு மார்ச் 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. திருப்பணியின் முதற்கட்டமாக 7 கோபுரங்களில் திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கின. மீதமுள்ள 14 கோபுரங்கள் ஐூலை 9ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 52 உபசன்னதிகள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டது. சந்திரபுஷ்கரணி குளம் தூர்வாரப்பட்டது. மேலும், கோயிலில் அனைத்து புனரமைக்கும் பணிகளும் பழமை மாறாமல் நடந்து வருகிறது.
90 சதவீதத்திற்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் வரும் 9ம் தேதி காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி செப்டம்பர் 7ம் தேதி மாலையில் முதற்கால யாக சாலை பூஜைகளும், 8ம் தேதி காவி ரியில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 2ம் கால மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி காலை 6.30 மணிக்கு 11 கோபுரங்கள், 43 உபசன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 2ம் கட்டமாக ராஜகோபுரம் உள்ளிட்ட மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளுக்கும், உபசன்னதிகளுக்கும் அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறலாம் என தொிய வருகிறது.