அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி
8/22/2015 11:58:50 AM
புதுடெல்லி: அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.தேசிய படை முன்னாள் கமாண்டோவும், தற்போது ஆம் ஆத்மி எம்எல்வுமாகவும் இருப்பவர் சுரேந்தர் சிங். இந்த மாத தொடக்கத்தில் 4ம் தேதி டெல்லி முனிசிபல் ஊழியர்கள் சிலர் வழக்கமான ஆக்கிரமிப்பு சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுரேந்தர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ஆர்.ஜே. மீனா என்பவர் கொடுத்த புகாரில், முனிசிபல் ஊழியர் முகேஷ் என்பவரை சுரேந்திர சிங் மற்றும் அவரது ஆதராவாளர்கள் அடித்து உதைத்ததுடன் சாதியை சொல்லியும் திட்டினர் என்று தெரிவித்திருந்தார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி முன் ஜாமீன் கேட்டு சுரேந்திர சிங் தரப்பு டெல்லி கோர்ட்டில் மனு செய்திருந்தனர். சுரேந்திர சிங்குக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று டெல்லி போலீசார் சுரேந்திர சிங்கை கைது செய்தனர்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யும் மத்திய மோடி அரசு, மும்பை தாக்குதலின் போது தேசத்திற்காக போராடி தீவிரவாதிகளின் தோட்டக்களை உடலில் தாங்கி பாடுபட்ட கமாண்டோ வீரர் சுரேந்திர சிங்கை கைது செய்துள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுரேந்திர சிங் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சாதி பெயரை சொல்லி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசாரால் கைது செய்யப்படும் 3வது ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது.