ஆஷஸ் கடைசி டெஸ்ட்; 107/8; பரிதாப நிலையில் இங்கிலாந்து
8/22/2015 11:57:57 AM
ஓவல்: இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 79.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்திருந்தது.ஸ்டீவ் ஸ்மித் 78 ரன், வோக்ஸ் 47 ரன்னுடன் களத்தில் இருந்தனர் நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்மித்-வோக்ஸ் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த வோக்ஸ் 76 ரன் எடுத்த போது ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நங்கூரமாக நின்ற ஸ்மித் சதம் விளாசினார். இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 4வது சதம் இது. மார்ஷ் 3, நேவல் 18, ஜான்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற ஸ்மித் 143 ரன்னில் பின் பந்தில் போல்டானார். 9வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய ஸ்டார்க் 52 பந்தில் 58 ரன் குவிக்க, ஆஸ்திரேலியா 125.1 ஓவரில் 481 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கி. தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் குக் 22 ரன்னில் (21 பந்து) லியான் பந்தில் போல்டானார். மற்றொரு துவக்க வீரர் லைத்(19) பீட்டர் சிடில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பெல் (10), ரூட் (6), ஸ்டோக்ஸ் (15), பட்லர் (1) பிராட் (0) என வரிசையாக நடையை கட்டினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 107 ரன் எடுத்திருந்தது. மொயின் அலி, வுட் தலா 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லியான், பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி உள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.