பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்
8/22/2015 11:57:36 AM
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை எதிர் கொண்டார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-4, 6-1 என நேர் செட்களில் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 33 தூண்டப்படாத தவறுகளைச் செய்தார். வாவ்ரிங்காவின் சர்வீஸ்களை நான்கு முறை முறியடித்த ஜோகோவிச், தனது சர்வீஸில் 12 புள்ளிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கனியைப் பறிக்க ஜோகோவிச்சுக்கு 63 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வாவ்ரிங்கா கைப்பற்றினார். இதன் பின்னர் இருவரும் சந்தித்த இந்தப்போட்டியில், வாவ்ரிங்காவை வென்று ஜோகோவிச் பழி தீர்த்துக் கொண்டார்.ஜோகோவிச் அரையிறுதியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரான தகுதி நிலை வீரர் அலெக்சாண்டர் டொல்கோபோலோவை எதிர் கொள்ள உள்ளார். டொல்கோபோலோவ் காலிறுதி ஆட்டத்தில் 6-4, 6-2 என நேர் செட்களில் செக். குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சை வென்றது குறிப்பிடத்தக்கது.மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபஸை எதிர் கொண்டார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஜர் பெடரர் 6-3, 6-4 என்ற செட்களில் லோபஸை வீழ்த்தினார். மூன்றாம் நிலை வீரர் ஆண்டி முர்ரே, 4-6, 6-1, 6-4 என மூன்று செட்களில் போராடி பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், செர்பிய வீராங்கனை அனா இவானோவிக்கை சந்தித்தார். முதல் செட்டின் முதல் கேமில் இவானோவிக்கின் சர்வீஸை செரீனா முறியடித்த போதிலும், நேர்த்தியான ஆட்டத்தை அவரால் தொடர முடியவில்லை. இதனால், இவானோவிக், செரீனாவின் சர்வீஸ் கேம்களை முறியடித்து முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் செரீனாவின் சர்வீஸ் கேமை முறியடித்து 4-3 என இவானோவிக் முன்னிலை பெற்றார். தோல்வியின் பிடியில் இருந்த செரீனா, பின்னர் சுதாரித்து ஆடி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இவானோவிக்கின் சர்வீஸ் கேம்களை முறியடித்த செரீனா இரண்டாவது, மூன்றாவது செட்களை கைப்பற்றினார். செரீனா வில்லியம்ஸ் 3-6, 6-4, 6-2 என மூன்று செட்களில் இவானோவிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.14ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 2-6, 6-0 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீராங்கனை லூசி சபரோவாவை வென்றார். செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிச் 6-4, 6-2 என நேர் செட்களில் ஸ்லொவாகிய வீராங்கனை அன்னா கரோலினாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.