நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்
8/22/2015 11:53:26 AM
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அட்டப்பாடி, அகழி, முக்காலி, ஆனவாய், சின்டக்கி, மூலக்கொம்பு, மேல்முள்ளி உள்ளிட்ட பகுதிகள் தமிழக எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ளது. இந்த ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் உள்ளது. இதையடுத்து தமிழக மற்றும் கேரளா அதிரடிப்படையினர் எல்லையோர பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மேல்முள்ளி மற்றும் குப்பன்காலனி என்ற இடத்தில் சமீபத்தில் மூன்று பெண்கள் உள்பட 8 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர். யாராவது உங்களை துன்புறுத்தினால் எங்களிடம் சொல்லுங்கள் என கிராம மக்களிடம் கூறியுள்ளனர். மேலும் ரேஷன் பொருட்களையும் வாங்கி சென்றுள்ளனர். இதையடுத்து கேரள வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.மாவோயிஸ்ட்கள் தமிழக பகுதிக்குள் ஊடுருவுவதை தடுக்க நேற்று மன்னார்காடு டி.எப்.ஓ ராஜூதோமஸ் தலைமையில் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மஞ்சூர் வழியாக கோரக்குந்தா, அப்பர்பவானி, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். 4 குழுக்களாக பிரிந்து சைலன்ட்வேலி, குலுக்கல்மலை, ஆனவாய் சிண்டக்கி, முக்காலி உள்ளிட்ட கேரளா வனப்பகுதிகளை முற்றுகையிட்டு மாவோயிஸ்ட் தேடுதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.