மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு
8/22/2015 11:49:12 AM
ஊத்துக்கோட்டை: பூரண மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்ப ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவி எரிக்கப்பட்டு வருகிறது என கும்மிடிப்பூண்டியில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில், 100 மீனவ குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் ஆர்.பி. சரவணன் வரவேற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள கண்ணன்கோட்டை பகுதியில் ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்காக பயிர்களை அழித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தியது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோல் அம்மா குடிநீர் திட்டத்துக்காக இப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நீலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு. அதிமுகவினர் எந்த திட்டம் தொடங்கினாலும் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் பூரண மதுவிலக்கு பிரச்னையை திசை திருப்பவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘’கண்ணன்கோட்டையில் விவசாய நிலத்தை அழித்தது தவறான செயல். கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீருக்காக தண்ணீர் உறிஞ்சப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டத்திலேயே தண்ணீர் எடுத்து விற்பனை செய்யலாமே? கும்மிடிப்பூண்டியில் பஸ் டெப்போ அமைப்பதாக சட்டமன்றத்தில் அதிமுக அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படி அமைத்தால் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ள சி.எச்.சேகருக்கு பெயரும், புகழும் கிடைத்துவிடும் என்பதற்காக திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்’’ என்றார்.ஏ.வி.ஆறுமுகம், டேவிட்சன், நம்பாக்கம் இ.முனிவேல், எஸ்.ஞானமுத்து, ெப.முருகேசன், ஞானமூர்த்தி, சசிபூஷன், பி.எம்.சாமி, என்.மணிகண்டன், சாந்தி ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் கே.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.