அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை
8/22/2015 11:46:24 AM
ஆவடி: கொரட்டூரில் பூட்டிய வீட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து நகை, காஸ் சிலிண்டர்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.சென்னை, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், மாதானங்குப்பம், கடப்பாசாலை சேர்ந்தவர் சண்முகவடிவேலின் மனைவி சந்திரகுமாரி (70). இவரது மகன் கார்த்திகேயன் (47). இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். ஐ.சி.எப் காலனியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் சந்திரகுமாரி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனால் கார்த்திகேயன் அடிக்கடி சந்திரகுமாரியின் வீட்டுக்குச் சென்று பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் வீட்டுக்கு கார்த்திகேயன் சென்றார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். சந்திரகுமாரி வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 2 காஸ் சிலிண்டர்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.