ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : நடிகை ரோஜா குற்றசாட்டு
8/21/2015 3:23:07 PM
சித்தூர்: ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது என்று நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா கூறினார்.ஆந்திர மாநிலம் நகரி நகராட்சி ஆணையாளரை தாக்கியதாக நகராட்சி தலைவர் சாந்தகுமாரியின் கணவர் குமார், அவரது மகன் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.நடிகையும், நகரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான ரோஜா நேற்று சிறையில் உள்ள குமார் மற்றும் அவரது மகனை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் சிறைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:தெலுங்கு தேசம் கட்சி மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரையும் ஏதாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து சிறையில் அடைக்கின்றனர். தெலுங்கு தேசம் கட்சி பழிவாங்கும் ஆட்சி நடத்தி வருகிறது.
ஆளுங்கட்சியினர் ரவுடி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் மக்களுக்காக நான் பேசுவதால் என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கோபத்தை சந்திரபாபு நாயுடு சம்பாதித்து விட்டால் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வவேண்டி இருக்கும். நகரி நகராட்சி தலைவர் ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்தவர். ஆனால் ஆணையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் தலைவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதை தட்டிக்கேட்டதால் நகராட்சி தலைவரின் கணவர் மற்றும் அவரது மகன் மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இது ஆளுங்கட்சியின் அராஜகத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.